உணவு பாதுகாப்புக்கான தீர்வை நோக்கி உழைக்கும் இந்தியா - விவசாயிகளின் வலிமையை உணர்ந்த மோடி அரசு!

இந்தியா உணவு உபரி நாடாக மாறிவிட்டதாகவும் தற்போது உலக உணவு பாதுகாப்புக்கான தீர்வை நோக்கி உழைப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Update: 2024-08-05 14:36 GMT

வேளாண் பொருளாதார நிபுணர்களுக்கான 32 வது சர்வதேச மாநாடு டெல்லியில் நடக்கிறது. 65 ஆண்டுகளுக்குப் பின் இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது. சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கடைசியாக வேளாண் பொருளாதார நிபுணர் மாநாடு நடந்தபோது இந்தியா புதிதாக சுதந்திரம் பெற்ற ஒரு நாடாக இருந்தது. நாட்டின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஒரு சவாலான நேரமாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா ஒரு உணவு உபரி நாடாக மாறி இருக்கிறது. பால், பருப்பு வகைகள் உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பஞ்சு, சர்க்கரை, தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது . இந்தியாவின் உணவு பாதுகாப்பு உலகிற்கே கவலையை அளிக்கும் ஒரு காலம் இருந்தது.

ஆனால் தற்போது இந்தியா உலக உணவு பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு தீர்வு காண உழைத்து வருகிறது. எனவே உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது. ஒரு விஸ்வ பந்துவாக உலக நன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாடு தீவிரமானது . 'ஒரு பூமி, ஒரே குடும்பம் ,ஒரே எதிர்காலம்', 'ஒரு பூமி ஒரே சுகாதாரம்' என பல்வேறு மந்திரங்களை சர்வதேச அளவில் பல்வேறு மன்றங்களில் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது.

இந்தத் துறையை ஒரு நிலையான முறையில் மேம்படுத்துவதில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய விவசாயத்தில் 90 சதவீத விவசாயிகளுக்கு சிறிய நிலை மட்டுமே சொந்தமாக உள்ளது. இந்த சிறிய விவசாயிகள் தான் நாட்டின் உணவு பாதுகாப்புக்கு மிகப்பெரிய வலிமையை வழங்குகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் புதிய பருவநிலை சார்ந்த 1900 பயிர் வகைகளை இந்தியா வழங்கி இருக்கிறது. இரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியாவுக்குப் படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

Similar News