கரூர் நகரில் அமைந்துள்ள அரசு இசைப்பள்ளியில் கா.ஜெயராஜ் என்ற ஆசிரியர் தவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் பணி ஓய்வு முடிந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இவரின் பணியை மேலும் ஒரு கல்வி ஆண்டிற்கு வரை நீடிப்பதற்கு வேண்டிய அனைத்து விண்ணப்பங்களையும் தமிழக கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார். கலைப் பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனர் இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார், அதனால் தவில் ஆசிரியர் ஜெயராஜின் பணி நீட்டிப்பு குறித்த எந்த தகவலும் இசை பள்ளி தலைமை ஆசிரியருக்கு வராமல் இருந்துள்ளது.
இந்த தகவலை தனது ஓய்வு பெறும் நாளில் தெரிந்து கொண்ட கா.ஜெயராஜ் அதிர்ந்து பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய பேரவை கலை பண்பாட்டு துறை ஆசிரியரும், ஊழியர் பேரவை மாநில பொதுச் செயலாளருமான அய்யனார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இசைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களின் பணியை நீட்டிப்பு செய்யலாம் என்பதை தமிழக அரசு ஒரு ஆணையாக வெளியிட்டுள்ளது.
அதனைப் பின்பற்றி கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனர் கரூர் மாவட்ட இசை பள்ளி தலைமை ஆசிரியருக்கு தவில் ஆசிரியரின் பணி நீட்டிப்பு குறித்த கடிதத்தை அனுப்பாததால் அந்தப் பள்ளியில் தவில் கற்கும் 15 மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு ஆசிரியர்களை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் உதவி இயக்குனர் செயல்படுவதோடு தொடர்ச்சியாக ஜாதிய பாகுபாடுகளை கடைப்பிடித்து வருகிறார். இவரின் செயலை ஆசிரியர் ஊழியர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியரின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் அதோடு ஜெயராஜ் பணி நீட்டிப்பு ஆணையை வழங்கிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை கலை பண்பாட்டு துறை ஆசிரியர், ஊழியர் பேரவை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்.