'வினேஷ் போகத் நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன்'- பிரதமர் மோடியின் ஆறுதல்!
வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் ஃபைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். தகுதி சோதனையில் நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வினேஷ் நீங்கள் சாம்பியன்களின் ஒரு சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. அத்துடன் ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேகம் நீங்கள். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம் நீங்கள் மீண்டு வருவீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கிறோம் " என பதிவிட்டுள்ளார்.