தமிழகத்தில் தொடர் கதையாகும் இந்து விரோத செயல்கள்....போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்!

Update: 2024-08-13 13:21 GMT

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏறாந்தை கிராமத்தில் 150 இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு வசித்து வந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளதாகவும், தற்போது அவர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக பொது இடத்தில் தேவாலயம் கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஒரு குடும்பத்தின் இந்த தனிப்பட்ட முடிவிற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கிறிஸ்தவ குடும்பம் தங்கள் தனிப்பட்ட முறையில் வழிபாடுகளை நடத்தலாம் என்றும், பொது இடத்தில் சரியான அங்கீகாரம் இல்லாமல் தேவாலயம் கட்டப்படுவது விமர்சனத்திற்கு உள்ளானது என்றும், அந்த கிராமப் பகுதி மக்கள் தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர். இதேபோன்று நேற்று முன் தினம் உச்சி மகாகாளி அம்மன் கோவிலில் அனுமதியின்றி தேவாலயம் கட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கிராம தலைவர் தனா சிங் பேசும் பொழுது, அந்த ஒரு குடும்பம் மதம் மாறியதில் இருந்து, இந்து கோவில்களின் விழாக்களுக்கு இடையூறு தெரிவித்து வருகிறது. தற்போது வருவாய்த்துறை அல்லது காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தேவாலயம் கட்டி வருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கிறோம், இல்லையென்றால் உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்புவதை நிறுத்தி எங்கள் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவது எதிர்த்து ஏறாந்தை பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி கோவில் வளாகத்தின் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் கூட நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்தில், மருங்கூர் மெயின் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் எதிரே, கோவில் பார்வையாளர்களை மதமாற்று முயற்சியில் ஈடுபட்டுள்ள சட்டவிரோத பூஜை கூடத்தை தடை செய்ய கோரி இந்து முன்னணி அமைப்பினர் முறைப்படி புகார் அளித்துள்ளனர். 

இப்படி தமிழகத்தில் திராவிட மாடலின் ஆட்சியில் இந்துக்களை மதமாற்ற சட்டவிரோதமான கட்டுமானங்கள், செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்துக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Source : The Commune 

Tags:    

Similar News