பத்தாண்டுகளில் இந்தியா அடைந்த மாற்றத்தை வரைபடம் ஆக்கி இருக்கும் மோடியின் சுதந்திர தின உரை!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்த மாற்றத்தை வரைபடமாக்கி இருப்பதாக பா. ஜனதா பாராட்டி உள்ளது.;
இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவரது உரையை பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் பாராட்டியுள்ளனர். அந்த வகையில் உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், 'பிரதமர் மோடியின் உரையானது அடிவானத்தில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தின் பரந்த பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் பாரதம் தனது இலக்கை அடைய முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்தது' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் 'கடந்த 10 ஆண்டுகளில் சீர்திருத்தங்கள் மூலம் சுயமாற்றத்திற்கான பயணத்தை பாரதம் பட்டியலிட்டுள்ளது. இது குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்துடன் கூடிய புதிய பாரதம். 140 கோடி குடிமக்கள் தங்களுக்கு தகுதியான மகத்துவம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நிச்சயமாக அடைய முடியும் என்று உறுதியாக நம்பும் புதிய பாரதம்' என்று பாராட்டியுள்ளார். பா.ஜனதா தலைவரும் சுகாதாரத் துறை மந்திரியுமான ஜே.பி நட்டா தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விருப்பங்களை மோடியின் உரை பிரதிபலித்துள்ளது.தேச வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளில் ஒரு உலக வல்லரசுக்கான ஏராளமான இலக்குகளை தனது உரையில் அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்' என குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்த மாற்றத்தை வரைபடம் ஆக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜே.பி நட்டா தேசத்தின் சாதனைகளை சுட்டிக்காட்டி 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ந்த பாரதம்' திட்டத்தை மீண்டும் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் செழிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து முயற்சி செய்ய இந்த தொலைநோக்கு நம்மை தூண்டுவதாகவும் ஜே.பி நட்டா பாராட்டியுள்ளார்.