ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு எதிராக தக்க பதிலடி கொடுத்த இந்தியா!
ஐ.நா.வில் புலம்பிய பாகிஸ்தானுக்கு அதே இடத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா தனது ராணுவத்திறனை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவதற்காக நடவடிக்கைகளை துவங்கி விட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளிப்பதற்கான உரிமையை பயன்படுத்தி ஐநா சபையில் இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களானந்தன் பேசியதாவது:-பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து கூறிய கருத்து கேலிக்கூத்தானது. பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது .இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் நீண்டகாலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி உள்ளது. அத்தகைய நாடு வன்முறையை பற்றி எங்கும் பேசுவது பாசாங்குத்தனம். இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.