தொழில் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.. இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு..
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிட்கின் தொழிற்பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புனேயில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் ஸ்ரீ ஏக்நாத் ஷிண்டே, பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர அரசின் வீட்டுவசதி, இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அதுல் சாவே, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் பகவத் காரத் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஆரிக் ஹாலில் இருந்து இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.
டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஐ.சி.டி.பி) கீழ் 7,855 ஏக்கர் பரப்பளவில் பிட்கின் தொழில்துறை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தொழில்துறை மையம் மராத்வாடா பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
* பிட்கின் தொழில்துறை பகுதி சிறந்த போக்குவரத்து இணைப்பைக் கொண்டுள்ளது.
* ரூ.6,414 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,427 கோடி முதலீட்டில் 2,511 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டத்தை அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
*பிட்கின் தொழில்துறை பகுதி இப்போது பரந்த சாலைகள், தரமான நீர், மின்சாரம் மற்றும் மேம்பட்ட கழிவுநீர், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் உள்ளது.
முக்கிய முதலீடுகள்:
பிட்கின் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதலீட்டு ஆர்வத்தை ஈர்த்துள்ளது. ஏதர் எனர்ஜி (100 ஏக்கர்), லுப்ரிசோல் (120 ஏக்கர்), டொயோட்டா-கிர்லோஸ்கர் (850 ஏக்கருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்), ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டி போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் இப்பகுதியில் தொழில் தொடங்க உறுதியளித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த நான்கு திட்டங்கள் மட்டும் ரூ.56,200 கோடி மொத்த முதலீட்டையும், 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பிட்கின், தொழில்துறையின் கலங்கரை விளக்கமாக மாறும் எனவும், வேலைவாய்ப்பை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Input & Image courtesy: News