அரியானா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த பாஜக!
மாநிலத்தின் வளர்ச்சி நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என அரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக வாகை சூடியது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ,அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி தனது எஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :-
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவுக்கு பெரும்பான்மை வழங்கியதற்காக அரியானா மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி .இதன் மூலம் பாஜக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. காஷ்மீரில் பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. யூனியன் பிரதேசத்தில் பாஜகவின் செயல் திறனில் பெருமைப்படுகிறேன். பாஜகவுக்கு வாக்களித்த எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.ஜம்மு காஷ்மீர் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் .
370 மற்றும் 35 ஏ சட்டங்கள் நீக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். இதற்காக யூனியன் பிரதேசத்தின் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் .இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார். இதே போல மத்திய மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் தள பதிவில் "பயங்கரவாதம் அதிகரித்திருந்த காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கடமையாற்றி அமைதியாக தேர்தலை நடத்தி முடித்து தங்களது தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். அமைதியாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்தையும் போலீசாரையும் பாராட்டுகிறேன் "என்று கூறியுள்ளார்.
மேலும் அரியானா தேர்தல் வெற்றி குறித்து அமித்ஷா தனது பதிவில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியை பிளவுபடுத்த நினைத்தவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், தர்மேந்திர பிரதான், பாஜக தலைவர் ஜே. பி நட்டாவும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.