தமிழ்நாட்டில் மின்சாரத் துறை: மின் திட்டங்களின் மோடி அரசு அளிக்கும் சலுகைகள்!
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து மத்திய மின்சாரம், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் திட்டங்களான 800 மெகா வாட் வடசென்னை அனல் மின் திட்டம் - III (மூன்றாம் நிலை), 2X660 மெகா வாட் உடன்குடி அனல் மின் திட்டம் (முதல் நிலை), 2X660 மெகா வாட் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், 600 மெகா வாட் எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாக அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர். மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், மின் இழப்பைக் குறைப்பதற்காக 8,932 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய, மாநில அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், கடந்த இரண்டு நாட்களாக அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் தமிழ்நாடு மின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தில் பயனாளிகளை அதிகம் இணைக்குமாறும், அதன் மூலம் அவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
Input & Image courtesy: News