அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் தேசத்தின் வல்லமை சர்தார் வல்லபாய் படேல் உருவச்சிலை, மேஜர் ராலெங்னாவ் பாப் காத்திங் வீர அருங்காட்சியகம் ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மெய்நிகர் முறையில் 2024 அக்டோபர் 31 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் முதலாவது துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் தேச ஒற்றுமை தினம், தீபாவளி ஆகியவற்றுடன் இந்தத் திறப்பு விழா இணைந்தது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில பகுதிகளில் கள நிலைமையை மீட்டெடுக்க இந்தியாவும் சீனாவும் அடைந்த விரிவான ஒருமித்த கருத்தைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சர் தமது உரையைத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சமமான மற்றும் பரஸ்பர பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு விரிவான ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது. இது பாரம்பரிய பகுதிகளில் ரோந்து மற்றும் மேய்ச்சல் உரிமைகளை உள்ளடக்கியது. இந்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில், படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறை ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இந்த விஷயத்தை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அப்பால் கொண்டு செல்வதே எங்கள் முயற்சியாக இருக்கும். ஆனால் அதற்கு, நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்படும் சர்தார் படேலுக்கு திரு ராஜ்நாத் சிங் புகழஞ்சலி செலுத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு 560க்கும் அதிகமான சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில் அவரது முக்கிய பங்கை எடுத்துரைத்தார், இது ஒன்றுபட்ட இந்தியாவுக்கான அவரது வெல்லமுடியாத உறுதிப்பாட்டிற்கு சான்றாக நிற்கிறது. தேசத்தின் வல்லமை எனும் இந்த சிலை மக்களை ஊக்குவிக்கும், ஒற்றுமையின் வலிமை மற்றும் நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்க தேவையான அசைக்க முடியாத உணர்வை அவர்களுக்கு நினைவூட்டும் என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News