செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன்
காஞ்சிபுரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருத்தலம்.
பகீரதன் என்ற மன்னன் இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்ட புரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால் தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் எனும் ஆணவத்தில் இருந்த மன்னன் நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்கு சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். அவன் பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்திருந்தான்.
அவனிடம் "பகீரத மன்னன் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான் உன்னுடைய திக் விஜயம் முழுமை பெற்றதாகும்" என்றார். நாரதர் .இதை அடுத்து கோரன் பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனை தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால் நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான் .அங்கே அவனுக்காக காத்திருந்தார் நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இறங்கினார். துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு உனக்கு நல்ல வழி பிறக்கும் என்று ஆசி கூறி அனுப்பினார்.
பகீரதனும் துர்வாச முனிவரிடம் சென்று நடந்ததைக் கூறி மனம் வருந்தி தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி நின்றான். துர்வாச முனிவர் பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார். அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து அழியாத பெயர் பெற்றான் பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே வல்லக்கோட்டை முருகப்பெருமான் திருக்கோவில். வள்ளி தெய்வானை உடனாய கோடை ஆண்டவர் என்ற பெயரோடு இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி நல்வினைகளை வழங்கும் அபயகரத்துடன் நின்றகோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.