ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம்: தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மோடி அரசு!
காசி தமிழ்ச் சங்கம் 3.0-வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசிக்கு சென்றனைந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் வினீத் ஜோஷி, கூடுதல் செயலாளர் சுனில் குமார் பர்ன்வால், இயக்குநர் மன்மோகன் சிங், உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தமிழக குழுவினருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.
வாரணாசி ரயில் நிலையத்தில், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, ஸ்வஸ்திகா மந்திரங்கள் முழங்க மலர் தூவி, மாலைகள் அணிவித்து முதல் குழுவினர் வரவேற்கப்பட்டனர். "வணக்கம் காசி" என்ற வாசகத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு இளம் பிரதிநிதி கூறுகையில், "இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். வட இந்தியாவுக்கும் தென்னிந்தாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் நான்கு நாள் பயணமாக வந்துள்ளேன்" என்றார்.
மற்றொரு மாணவி கூறுகையில், "மகா கும்பமேளாவில் நீராடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அயோத்திக்கு செல்வது எனது கனவு. இப்போது அதுவும் நனவாகப் போகிறது. இரண்டு பெரிய மாநிலங்களை இணைக்கும் இந்த அற்புதமான முயற்சிக்காக மத்திய அரசுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.