ஈஷா அறக்கட்டளையில் சிவராத்திரி கொண்டாட்டங்களை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி: எதிரான வழக்கு தள்ளுபடி!
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு முரணாக நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தாரவிட்டது.
கோவையில் ஈஷா யோகா மையம் நடத்த உள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சியை அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்தில் கூடுகின்றனர். ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வன சுழல் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறது.
கடந்த வருடம் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுபடுத்தியது. அதேபோல் அரசு நிர்ணயத்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவைவிட அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டது .எனவே ஈஷாவில் முறையான கடுமையான சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்துமாறு விதிகளை மீறி வன சூழலை பாதிக்கும் வகையில் ஒலி ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார்.அதில் உரிய விதிகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது .இதை அடுத்து வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.