தேசிய நெடுஞ்சாலைத்துறை : மக்கள் நலனுக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள்!
சாலை பாதுகாப்பிற்காக விபத்துகள் ஏற்படும் இடங்களை அகற்றவும் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும் மத்திய அரசு திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 2025 - 26 நிதியாண்டில் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது .இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைந்த இலக்கு ஆகும். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விரிவான பட்ஜெட் ஆவணம் வெளியானது. அதில் 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018- 19 ஆம் நிதியாண்டில் இருந்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் இலக்கு தூரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டு இலக்கு மிகக்குறைவு.
கடந்த 2019-2020 நிதி ஆண்டில் 10,237 km தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. 2020 -2021 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும் 13,327 km தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12,349 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 10,500 km தூரம் நெடுஞ்சாலை அமைக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் 8,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளன. 2025 26 ஆம் நிதி ஆண்டில் இலக்கு தூரம் பிறகு மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத் திட்டங்கள் மூலம் 30,000 கோடி திரட்டவும் தனியார் முதலீடு மூலம் 35 ஆயிரம் கோடி திரட்டவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த திட்டம் அசாம், சண்டிகர், பஞ்சாப் உத்தரகண்ட், ஹரியானா மற்றும் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் ஆயிரம் இடங்களை அகற்றவும் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.