அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு- இந்தியா கடும் கண்டனம்!
அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சினோஹில்ஸ் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் சுவரில் இந்து எதிர்ப்பு வாசகங்களை எழுதிவிட்டு சென்றனர்.கோவிலை நிர்வகித்து வரும் பாப்ஸ் எனும் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கலிபோர்னியாவின் சினோஹில்சில் உள்ள ஒரு இந்து கோவில் அவமதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கிறது. சினோஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா சமூக மக்களுடன் ஒன்றிணைந்து நிற்போம். வெறுப்பை வேறு ஒன்றை அனுமதிக்க மாட்டோம் .
நமது பொதுவான மனிதநேயம் மற்றும் நம்பிக்கை,அமைதி மற்றும் இரக்கம் நிலவுவதை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்காவில் உள்ள பல இந்து அமைப்புகள் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு பிரிவை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்து கோவில் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது பற்றி கூறுகையில், கலிபோர்னியாவின் சினோஹில்சில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த இழிவான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் சட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் என கூறினார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் இந்து கோவில் அவமதிக்கப்பட்ட பத்தாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோ என்ற நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலில் இதே போல இந்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.