
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுதல், மீன்பிடி படகுகளின் இறங்குதளங்கள், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்டவற்றிற்காக மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள் மற்றும் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 2020-21 முதல் 2024-25 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.3490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன், ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்கட்டமைப்பில் நிலையான முதலீட்டை இந்தத் திட்டம் வழங்குகிறது.

இறால் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், விசாகப் பட்டினம், சென்னை, பாரதீப், கொச்சி மற்றும் மும்பை துறைமுகங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றைச் சாகர்மாலாவுடன் இணைந்து 100% நிதி உதவியுடன் ரூ.651.14 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
2023-24 நிதியாண்டில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.60,523.89 கோடி மதிப்புள்ள 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.