மாணவர்களின் புதிய சிந்தனைகளையும், புதுமையான யோசனைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அழைப்பு விடுத்துள்ளார். வளர்ச்சி அடைந்த பாரதத்தின் பார்வையை நனவாக்க அறிவின் சக்தியுடன் கூடிய இளைஞர் சக்தி முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ஸ்ரீராம் அகாடமி பாடசாலையின் 20-வது நிறுவன தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சர்பானந்த சோனோவால் உரையாற்றினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், புகழ்பெற்ற உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பேசிய திரு சர்பானந்த சோனோவால், மாணவர்கள் தங்களை பாடப்புத்தகங்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது எனவும் புதிய சிந்தனைகளையும், புதுமையான யோசனைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைத்த அவர், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் புதிய தலைமுறையினருக்கு அதிகாரம் அளிக்கத் தொடங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
அறிவு என்பது சக்தி எனவும் மாணவர்கள் அதைப் பெற்று அதிக நன்மைக்காக திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். யோகாவையும், முழுமையான சுகாதார நடைமுறைகளையும் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடனம், இசை, நாடகம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.