சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் நீலகிரி சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும்- எல்.முருகன் உறுதி!
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் நீலகிரியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்தார்
நீலகிரி மற்றும் கோவையில் அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதற்காக ஊட்டி அருகே பசவக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ரஞ்சன் குடும்பத்தினர் முயற்சியில் தி நீலகிரி திங் டேங்க் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .இதை தொடர்ந்து சமூக சேவையில் ஆர்வம் உள்ள தொழில் அமைப்பினர் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து 'வாங்க சாதிக்கலாம்' என்ற தலைப்பில் பசவக்கல்லில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா. ஜனதா வேட்பாளரும் மத்திய மந்திரியுமான எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீலகிரி மற்றும் கோவை தொழில் அமைப்பினர் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார ஊர் தலைவர்களுடன் கலந்துரையாடினார் .அப்போது அவர் பேசியதாவது :-
நீலகிரி பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சுற்றுலாத்தலமாக மாறி இருக்க வேண்டும் .ஆனால் சரியான தொலைநோக்கு திட்டங்கள் இல்லாததால் நீலகிரியில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் நீலகிரி சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்பது எனது முதலாவது தேர்தல் வாக்குறுதியாகும் .காடுகள் இயற்கை காட்சிகள் உள்ள ஊட்டியை தவிர்த்து சிறிய நாடாக உள்ள சிங்கப்பூர், துபாய் ,இலங்கை போன்ற இடங்களுக்கு இங்கிருந்து அதிகளவில் சுற்றுலா செல்கின்றனர். ஊட்டியை சிங்கப்பூர் துபாய் போன்ற இடங்களுக்கு நிகராக ஏன் மாற்றக்கூடாது?
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகள் அமைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். இதே போல் நீலகிரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏன் ஏற்படுத்தக் கூடாது. பெங்களூர் மைசூர் எட்டு வழி சாலை அமைக்கப்பட்டதால் பயண நேரம் ஒன்றரை மணி நேரமாக குறைந்தது. இதே போல் பெங்களூரு -மைசூர்- ஊட்டி கோவையை இணைத்து சிறந்த சுற்றுலா மையமாக மாற்றப்படும்.
நீலகிரி சர்வதேச சுற்றுலா தலமாக மாறினால் இங்கு வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு விஷயங்கள் சர்வதேச அளவில் வந்துவிடும். நீலகிரி பச்சை தேயிலை விலை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் .படுகர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் இங்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு பொருளாதாரம் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI