வலிமையான பா.ஜனதா அரசால் பயங்கரவாதிகளை நமது படைகள் அழித்து வருகிறது- பிரதமர் மோடி!
வலிமையான பாஜக அரசு நடப்பதால் பயங்கரவாதிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே நமது படைகள் கொன்று குவித்து வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் நாளான 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது .இதை ஒட்டி அங்குள்ள ரிஷிகேஷ் நகரில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடந்த காலங்களில் பலவீனமான காங்கிரஸ் அரசுகள் இருந்தன. அவை எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்தவில்லை. ஆனால் தற்போது எல்லைகளில் சாலை சுரங்க பாதை போன்ற கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன .பலவீனமான நிலையற்ற அரசுகள் இருக்கும் போதெல்லாம் பயங்கரவாதிகள் அதை சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். பயங்கரவாதம் பரவும்.
ஆனால் தற்போது வலிமையான பா. ஜனதா அரசு நடந்து வருவதால் பயங்கரவாதிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே நமது படைகள் கொன்று குவித்து வருகின்றன. வலிமையான அரசு இருப்பதால்தான் 370-வது பிரிவை நீக்க துணிச்சல் இருந்தது.முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர முடிந்தது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடிந்தது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் கொண்டுவர முடிந்தது .இந்த அரசின் திட்டங்களால் பலனடைந்ததால் மீண்டும் மோடி அரசு என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்கிறது .ஊழல்வாதிகளை கொள்ளையடிக்க விடாமல் தடுத்ததால் எனக்கு எதிரான அவர்களது கோபம் உச்சத்தில் இருக்கிறது. நீங்கள் வழிபடும் 'சக்தியை' ஒழிப்போம் என்று பேசிய காங்கிரஸுக்கு உரிய பதிலடி கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI