பாகிஸ்தானின் நிலை இப்படியா போகனும்?
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களா தற்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களா தற்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நமது நாட்டின் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் கடும் நிதி சிக்கலில் தற்போது சிக்கியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது, பிரதமர், ஆளுநர்கள் உள்ளிட்ட முக்கிய வி.வி.ஐ.பிக்கள் இனிமேல் அரசு சொகுசு பங்களாவில் தங்கமாட்டார்கள். சாதாரண மக்கள் போன்று சிறிய வீடுகளில் வசிப்பார்கள் என்று கூறினார். இதன் மூலம் மீதமாகும் பணத்தை கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு சிறிய வீட்டில் குடியேறினார். அவரை போன்று ஆளுநர்கள், விவிஐபிக்களும் சிறிய வீடுகளில் குடியேறினர்.
இந்நிலையில், பிரதமரின் சொகுசு பங்களாவை பராமரிக்க அதிகமான பணம் செலவிட வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருமணம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பங்களாவை வாடகைக்கு விடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இம்ரான் கானின் ராணுவ செயலர் வாசிம் இப்திகாரின் மகளின் திருமணம் பிரதமர் பங்களாவில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தரப்பினர் கூறுகையில், கடுமையான நிதி நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இதனை சரிகட்டுவதற்காக இது போன்று பிரதமர் மற்றும் ஆளுநர்களின் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு விடப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.