அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள்: காவேரி கூக்குரலின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி!
'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே' காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு.
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு.மெய்யநாதன் அவர்கள் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். அப்போது காவேரி கூக்குரல் சார்பில் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு இன்று (ஏப் 28) ஓரே நாளில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார். கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பேசுகையில் "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.