இந்தியாவின் 10-வது வந்தே பாரத் ரயில் - நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில் நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும்.
மகாராஷ்ட்ராவுக்கு பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2.45 மணி அளவில், மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் 2 வந்தேபாரத் ரயில்களின் சேவையை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் மும்பை சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை - சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார். இது புதிய இந்தியாவிற்கான பயணியருக்கு உகந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு திறன் மிக்க சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் முக்கிய நடவடிக்கையாக அமையும்.
மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில், நாட்டின் 9-வது வந்தே பாரத் ரயிலாகும். புதிய உலகத்தரம் வாய்ந்த ரயில், மும்பை-சோலாப்பூர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சோலாப்பூரில் சித்தேஸ்வர், சோலாப்பூர் அருகே அக்கல்கோட், துல்ஜாபுர், புனே அருகே ஆலந்தி ஆகிய முக்கியமான யாத்திரை மையங்களுக்கு பயணிக்க முடியும். மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரிம்பகேஸ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.
மும்பையில் சாலைப் போக்குவரத்தின் நெரிசலைக் குறைப்பதற்காகவும், வாகனங்கள் நெரிசல் இன்றி, செல்லும் வகையில், சாந்தாக்ரூஸ் – செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப் பாதையை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். இவை மேற்கு விரைவுச் சாலையிலிருந்து கிழக்கு விரைவுச் சாலையை இணைத்து அதன் பிறகு கிழக்கு மேற்கு புறநகர் பகுதியை இணைக்கிறது. குரார் சுரங்கபாதை மேற்கு விரைவு நெடுஞ்சாலை மற்றும் மலாட், குரார் பகுதிகளை இணைப்பதற்கு முக்கியமான பாதையாகும். மக்கள் சாலையை எளிதாக கடக்க உதவுவதுடன் மேற்கு விரைவு நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்ல உதவும்.
Input & Image courtesy: News