சிலர் நான் மரணமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் - போப் பிரான்சிஸ் !
Breaking News.
வாடிகன்:
போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீப காலமாக உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். 84 வயதான அவர், சமீபத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்ததில் வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஜூலை 4-ந் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. இதில் குணமடைந்து 10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.
சமீபத்தில் இதுபற்றி அவரிடம் ஒருவர் உடல் நலம் விசாரித்தபோது விளையாட்டாக சில வார்த்தைகளை கூறினார். அவர் கூறும்போது, ''நான் இப்போதும் உயிருடன்தான் இருக்கிறேன். ஆனால் சிலர் நான் மரணமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் மரணமடைந்து விடுவேனோ என்ற எண்ணத்தில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்து கூட்டம் எல்லாம் நடத்துவதற்கும் தயாராகி விட்டார்கள்'' என்று கூறினார்.
போப் ஆண்டவர் மரணமடைந்துவிட்டாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ 'கர்தினால்கள்' ஒன்றுகூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வது வழக்கம். இதைதான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இந்த வார்த்தையை விளையாட்டாக கூறினார்.
மேலும், ''நான் ஆபரேஷன் செய்ய விரும்பவில்லை. ஆனால் என்னை பராமரித்த நர்சுதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். சில நேரங்களில் டாக்டர்களை விட நர்சுதான் புத்திசாலியாக இருப்பதை காணமுடிகிறது'' என்றும் சிரித்துக் கொண்டே கூறினார்.
Image : The Indian Express