டெல்லியில் 'பாரத் டெக்ஸ் 2024 ' ஜவுளித்துறை கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்த இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு!
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் வகையில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யசோ பூமி கண்காட்சி மையங்களில் 'பாரத் டெக்ஸ்டைல் 2024' என்ற பெயரில் ஜவுளி கண்காட்சி மற்றும் ஜவுளி சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட சர்வதேச அளவிலான மிகப்பெரிய ஜவுளி சார்ந்த நிகழ்வுகளில் ஒன்றான இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் பாரத் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது:-
அடுத்த 20 இந்த ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்கள். குறிப்பாக பாரதத்தின் ஜவுளித்துறை இந்த நான்கு தூண்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளது .எனவே பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஒரு வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்புவதில் ஜவுளி துறையின் பங்களிப்பை விரிவுபடுத்த பரந்த அளவில் அரசு பணியாற்றி வருகிறது. இதில் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்க எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
ஜவுளித்துறை வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் .2014 ஆம் ஆண்டில் இந்திய ஜவுளி சந்தை மதிப்பு ரூபாய் 7 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்தது .ஆனால் தற்போது ரூபாய் 12 லட்சம் கோடியை கடந்து விட்டது கடந்த 10 ஆண்டுகளில் நூல் துணி மற்றும் ஆடை உற்பத்தி 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளி துறையில் தரக்கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ஜவுளி துறையில் பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் கிராமப்புற பெண்களின் பங்கேற்பை பொறுத்தவரை ஆடை உற்பத்தியாளர்களில் பத்தில் 7 பேர் பெண்கள் ஆவர்.கைத்தறயில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது.