'பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர்' - காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி!
காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி 6800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த போது அம்மாநிலத்தின் முதலமைச்சர் பிரதமரை தனது மூத்த சகோதரர் என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பல வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வரவேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
எங்களைப் பொருத்தவரை வளர்ச்சி என்பது ஏழைகளின் மேம்பாடு, தலித்துகள், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடுதான் முக்கியம். பிரதமர் மோடி தெலுங்கானாவின் மூத்த சகோதரர். அவரது உதவியால் மட்டுமே முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். தெலுங்கானா முன்னேற வேண்டுமானால் குஜராத் மாதிரியை பின்பற்ற வேண்டும் .குஜராத்தை போல முன்னேற வேண்டுமானால் பிரதமர் உதவி தேவை .
காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை .சுமூகமான உறவை விரும்புகிறது. பொருளாதாரத்தில் லட்சிய இலக்கிற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாநிலத்தின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .தெலுங்கானா முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி வகித்தபோது மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார் .தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது .
காங்கிரஸ் முதல் மந்திரியான ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். மேலும் அவரை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார் .இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .தெலுங்கானா தேர்தலுக்கு முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்புறத்தில் இருந்து வந்த ரேவந்த் ரெட்டிக்கு அந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
SOURCE :Dinaseithi