இந்தியாவில் 142 கோடி மக்களை வழிநடத்தும் ஞானியாக இருப்பவர் பிரதமர் மோடி - அண்ணாமலை!
இந்தியாவில் 142 கோடி மக்களை வழிநடத்தும் ஞானியாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் கூறியதாவது :-
நமது நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கு மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை நீங்கள் பிரதமராக்க தயாராக வந்திருக்கிறீர்கள். இதுபோன்ற அரசியல் தலைவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.ஊழல் கட்சிகள் மக்களிடம் கொள்ளையடித்து அவர்களுடைய குழந்தைகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க துடிக்கிறது. மக்களே என்னுடைய குடும்பம், 142 கோடி இந்தியர்கள் தான் என் குடும்பம் என்று சொல்லிய மோடியின் குடும்பமாக, மோடியின் தம்பிகளாக ,மோடியின் தங்கைகளாக இங்கு வந்திருக்கிறோம்.
400 எம்.பி.க்கள் என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது .2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து உங்களது ஆசியோடு நமது பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும்போது 400 எம்பிக்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. இந்திய மக்களின் உணர்வாக இருக்கும். இதே கன்னியாகுமரிக்கு இன்னொரு மனிதரும் வந்தார். 1892ல் டிசம்பர் 24ல் நரேந்திர தத்தா என்கிற மனிதர் கடலில் நீந்தி மூன்று நாட்கள் பாறையில் அமர்ந்து தான் யார்?தன் நாடு எப்படிப்பட்ட நாடு?தன்னுடைய மதம் எப்படிப்பட்டது? என்பதை உணர்ந்தார்.
அந்த நரேந்திர தத்தா ஸ்வாமி விவேகானந்தராக மாறினார். அதேபோல் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு தவமாக ஞானியாக மாறி பிரதமர் மோடி வந்திருக்கிறார் .அவர் இப்போது 142 கோடி மக்களை வழிநடத்தக்கூடிய ஞானியாக விஸ்வகுருவாக நம்முடைய குடும்பமாக இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வல்லமை மிக்க தலைவராக நமது மண்ணுக்கு வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI