இந்தியாவிலேயே முதல்முறையாக முதியோருக்கு என்று பிரத்தியேக மருத்துவமனை- திறந்து வைத்த பிரதமர் மோடி!
இந்தியாவிலேயே முதன்முறையாக பிரத்யேகமாக முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை சென்னை கிண்டியில் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்தியாவின் வயது முதிர்ந்தோருக்கான மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து கட்டிடப்பணிகள் நிறைவுற்று முதலமைச்சர் அவர்களால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப்பின் பிரதமர் அவர்களால் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக இம்மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
200 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை 276 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் 8.64 ஏக்கர் நிலப்பரப்பு ஆர்ஜிதம் செய்யப்பட்டு இப்பணிகள் முடிவுற்று இம்மருத்துவமனை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இம்மருத்துவமனையின் பல்வேறு வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சைகள் வயது முதிர்ந்தவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது.
தினசரி இயங்கும் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படவுள்ளது. சிறப்பு சிகிச்சை பிரிவுகள், பிரத்யேக நோய்களான அறிவுத்திறன் குறைபாடு, நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமை, நாட்பட்ட வலி முதலியவற்றிற்கான நோய்கள் கண்டறிதல், புனர்வாழ்வு சிகிச்சைகள் ஆகியவை இம்மருத்துவமனையில் 24 மணிநேரமும் அளிக்கப்படவுள்ளன.
இங்கே அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களான எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுன்ட், ஸ்கேன் போன்ற வசதிகளும் இம்மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரத்த மாதிரிகளும், திசு பரிசோதனைகளும் இம்மருத்துவமனையில் சிறப்பாக செய்யப்பட உள்ளன. இம்மருத்துவமனை திறந்து வைக்கப்படும்போதே ரூ.1 கோடி மதிப்பிலான Essential Drugs என்று சொல்லக்கூடிய அவசர, அவசிய மருந்துகள் கையிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.முதியோர் இளைப்பாறுவதற்கு நூலகம் உள்ளது.