புதிய அரசின் 100 நாள் செயல் திட்டம் பற்றி பிரதமர் மோடி ஆய்வு!
மத்தியில் அமைய இருக்கும் புதிய அரசின் முதல் 100 நாள் செயல் திட்டம் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி நேற்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அதில் பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் ,தேசிய பேரிடர் மீட்புபணி தலைவர், பிரதமர் ,அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அந்த அரசு முதல் 100 நாட்களில் மேற்கொள்ள உள்ள செயல்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.
தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பே முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தை வகுக்குமாறு பல்வேறு அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளைப் பட்டியலிடுமாறு மத்திய மந்திரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் .அதன்படி தயாரிக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டம் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பஅலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி 25 தேர்தல் அலுவலர்களும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர் . எனவே வெப்ப அலையின் தாக்கம் பற்றி அதிகாரியுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீ விபத்துகளை தடுக்கவும் கையாளவும் ஒத்திகை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆஸ்பத்திரிகள் மற்றும் பொது இடங்களில் மின்சாரப் பாதுகாப்பு முறைகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் .