சிவன் சிலையை உடைத்த அறங்காவலர் -பக்தர்கள் அதிர்ச்சி!!
சிவன் சிலைக்கு அடியில் அம்மன் மாட்டிக்கொண்டு தவிப்பதாக தான் கனவு கண்டதாகவும், அதனால் அம்மனை விடுவிப்பதற்காக சிவன் சிலையை தோண்டி எடுத்ததாகவும், பின்னர் அங்கு அம்மன் இல்லாததால் சிவன் சிலையை அங்கேயே விட்டுவிட்டு வந்ததாகவும் அறங்காவலர் ராமு தெரிவித்தார்.
திண்டிவனம் அடுத்த மரக்காணம் அருகே 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் உள்ள சிவன் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பமாக கோவிலின் அறங்காவலர் புதையல் இருக்கும் என்ற ஆசையில் சிலையை உடைத்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் அருகே 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்யாசலேஸ்வரர் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. பழங்காலத்து சோழர் கல்வெட்டுகள் இருக்கும் பிரபலமான இந்த கோவில் பெருமுக்கல் சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்த கோவிலில் சிவன் மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் கடந்த 27ஆம் தேதியன்று மர்ம நபர்களால் சிவன் சிலை உடைக்கப்பட்டதாக அறங்காவலர் ராமு என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அறங்காவலர் ராமு அளித்த புகாரின் அடிப்படையில் கோவிலில் உள்ள சிவன் சிலை உடைப்பு சம்மந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கோவிலின் சாவி அறங்காவலர் ராமுவிடம் இருக்கும்போது பூட்டை உடைக்காமல் மர்ம நபர்கள் எவ்வாறு கோவிலுக்குள் சென்றிருக்க முடியும் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அறங்காவலர் ராமுவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அறங்காவலரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
சிவன் சிலைக்கு அடியில் அம்மன் மாட்டிக்கொண்டு தவிப்பதாக தான் கனவு கண்டதாகவும், அதனால் அம்மனை விடுவிப்பதற்காக சிவன் சிலையை தோண்டி எடுத்ததாகவும், பின்னர் அங்கு அம்மன் இல்லாததால் சிவன் சிலையை அங்கேயே விட்டுவிட்டு வந்ததாகவும் அறங்காவலர் ராமு முதலில் காவல்துறையினரிடம் தெரிவித்தார். மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய போது உள்ளே தங்கம்,வைரம், வைடூரியம் போன்ற புதையல்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிவன் சிலையை பெயர்த்து எடுத்ததை அறங்காவலர் ராமு ஒப்புக்கொண்டார்.