ஆதித்யா எல்-1 விண்கலத்தின் வெற்றி 'இந்தியாவின் மற்றொரு மைல்கல்'- பிரதமர் மோடி!
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மூலம் இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆதித்யா எல்-1 விண்கலம் எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "இஸ்ரோவால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு பெரிய சாதனை இதற்காக ஒட்டுமொத்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த பணி சூரிய பூமி அமைப்பை பற்றிய நமது அறிவை மேம்படுத்துவதுடன் முழு மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்திகளில் இந்தியா மற்றொரு மைல் கல்லை உருவாக்கியுள்ளது. சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது.
மிகவும் சிக்கலான விண்வெளி பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். நாட்டு மக்களுடன் இணைந்து நானும் இந்த மகத்தான சாதனையை பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
SOURCE :Dailythanthi