பல்வேறு புகழ்களை தன்னகத்தே கொண்ட சுந்தர பாண்டியன்: பிறந்த தினம் இன்று!
பாண்டியநாடு சிறப்போடு விளங்கியதற்கு காரணமாக இருந்த சுந்தர பாண்டியர் பிறந்த தினம் இன்று.
Credit goes to Krishnan
எம்மண்டலமும் கொண்டருளிய பெருமான் என்று தமிழிலும் 'ஸமஸ்த ஜகதாதார ஸோம குல திலக' என்று வடமொழியிலும் புகழப்பட்டவனும் பெருவீரனும், அறிவாளியும் தர்மவானுமான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்த தினம் இன்று. பிற்காலப் பாண்டியப் பேரரசை உன்னதமான நிலைக்குக் கொண்டு சென்றவர் சுந்தரபாண்டியன். சென்ற இடமெல்லாம் இவர்க்கு வெற்றிதான். தமிழகத்தின் பல கோவில்களிலும் இவனுடைய திருப்பணி உண்டு. மேலும் இவருடைய காலத்தில் பல்வேறு கோவில்களில் சிறந்த நிர்வாகம் இட பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தில்லைக் கோவிலுக்குப் பொன் வேய்ந்து அதன் மேற்குக் கோபுரத்தைக் கட்டியவர் இவர்தான். மேலும் ஶ்ரீரங்கத்தில் இவரும் இவர் அரசியும் யானை மேல் அமர்ந்து கொள்ள அதை ஒரு தெப்பத்தின் மீது ஏற்றி, அந்தத் தெப்பம் நீரில் எவ்வளவு அமிழ்கிறதோ? அந்த அளவைக் கொண்டு அதற்குச் சமமான பொன்னையும் பொருளையும் ரங்கநாதருக்குச் சமர்ப்பித்தார். மேலும் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமான் திருவிழாக்களில் அணியும் பாண்டியன் கொண்டை இவர் சமர்ப்பித்ததே. ஒருசமயம் ரங்கநாதருக்கு தீர்த்த பாத்திரம் இல்லாததால் தன்னுடைய கிரீடத்தை உடனடியாக அளித்து சேவை செய்தவர். இன்று வரை ஶ்ரீரங்கம் கோவிலில் தினமும் இவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அதற்கு காரணம் இவர் வழங்கிய அளவு இல்லாத கொடை தான்.
மதுரையில் பிரம்மாண்டமான கிழக்குக் கோபுரத்தைக் கட்டினார். கோவிலில் பல மண்டபங்களைக் கட்டி பல ஆபரணங்களையும் சமர்ப்பித்தார். பாண்டிய நாடு மிகவும் செல்வச்செழிப்போடு இவர் ஆட்சிக்காலத்தில் இருந்தது. இன்னும் எத்தனையோ புகழ்களைப் பெற்றவர் சுந்தர பாண்டியன். திருப்புட்குழிக் கோவில் கல்வெட்டு அவனை இவ்வாறு புகழ்கிறது. அந்த கல்வெட்டில் இவரைப் பற்றிக் கூறுகையில், வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி; வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்; வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்; வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே! என்று அவர் புகழ் இன்றும் பாடப்படுகிறது.
Input & Image courtesy: Twitter source