ஆப்கானிஸ்தானில் கொடூரம்: முக்காடு அணியாத இளம்பெண், தலிபான்களால் சுட்டுக் கொலை !
நசனீன் என்ற பெண்ணை முக்காடு அணியாததற்காக காரில் இருந்து இழுத்துச் சென்று தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கானிஸ்தானில் முக்காடு (பர்தா)அணியாததற்காக 21 வயது இளம் பெண் தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, தாலிபான்கள் , பால்க் மாவட்ட மையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நசனீன் என்ற பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர், ஏனெனில் பர்தா அணிய வேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாட்டிற்கு அவர் இணங்கவில்லை. அங்கே இஸ்லாமிய பெண்கள் பொது வெளியில் இருக்கும்போது முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், நஸனீனின் கொலையில் தனது அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
20 ஆண்டு கால போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. தலிபான் மீண்டும் எழுச்சி பெற்றது. தலிபான்களின் கோட்டையாக நீண்டகாலமாக அறியப்பட்ட பால்க் நகரத்தில் இந்த கொலை நடந்தது.
21 வயது இளம்பெண்ணின் சமீபத்திய கொலை, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்த ஆண்டுகளை நினைவூட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தலிபான்கள் பேர் போனவர்கள். அந்த நேரத்தில், பெண்கள் தங்கள் முகங்களையும் உடல்களையும் பர்தாவுக்கு கீழ் வைத்திருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் பள்ளி, வேலைகளுக்கு செல்ல முடியாது. ஆண் உறவினர் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூட தடை விதிக்கப்பட்டது. தவறான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் பகிரங்கமாக தாக்கப்பட்டனர் மற்றும் கள்ள உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் மைதானங்களில் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.
பல அறிக்கைகளின்படி, தலிபான்கள் இப்போது 233 மாவட்டங்களைக் கட்டுப்படுத்துகின்றனர், 1996 முதல் 2001 வரை தாங்கள் ஆட்சியிலிருந்த போது அமல்படுத்தியிருந்த அடக்குமுறை சட்டங்களை மீண்டும் தலிபான்கள் விதித்துள்ளனர்.
தற்போது அங்கு தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் அதிகாரப்பூர்வ ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற போட்டியிடுகின்றன.
இதன் விளைவாக, தலிபான்கள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அரசுப் படைகளை பின்னுக்குத் தள்ளவும் முயன்றதால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. அதன் தாக்குதலின் ஒரு பகுதியாக, தலிபானி பயங்கரவாதிகள் பெரிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.