தஞ்சை அருகே கண்டெடுக்கப்பட்ட கற்சிலை- பொதுமக்கள் பரவசம்!

பைரவர் சிலைக்கு ஊர்மக்கள் மஞ்சள்‌, பால் முதலான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து பூஜை செய்தனர்

Update: 2021-07-30 03:23 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஏரி நத்தம் கிராமத்தில் உள்ள குட்டையை தூர்வாரிய போது நான்கு அடி உயர பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஏரி நத்தம் என்னும் கிராமத்தில் விவசாயியாக இருந்து வருபவர் அருண்குமார். இவர் தனது வயலுக்கு பக்கத்தில் உள்ள குட்டையில் இருக்கும் மண்ணை எடுத்து தனது வயலில் கரை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது குட்டையில் இருந்து மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்த போது நான்கு அடி உயர கற்ச்சிலை ஒன்று வெளிப்பட்டது.

உடனே அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு சென்று சிலையை பார்த்தபோது அது பைரவர் சிலை என்று உறுதியானது. பின்னர் பைரவர் சிலைக்கு ஊர்மக்கள் மஞ்சள்‌, பால் முதலான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பின்னர் குட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்த தகவலை வட்டாட்சியரிடம் தெரிவித்த பின்னர் அவரிடம் சிலையை ஒப்படைத்தனர்.

குட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலையை தஞ்சை மாவட்ட தொல்லியல் துறையிடம் ஒப்படைத்த பின்னர் அது அருங்காட்சியத்தில் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கற்சிலையை பற்றி ஆராய்ந்து தகவல் வெளியிட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Source: தினமணி

Image courtesy : Twitter

Tags:    

Similar News