அறநிலையத்துறைக்கே தெரியாமல் கும்பாபிஷேகம் நடத்திய கில்லாடி! கோவில் சொத்துக்களையும் அபகரித்ததால் அதிர்ச்சி!

Update: 2021-12-19 06:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சொத்துகள் விற்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் அறநிலையத்துறை செயல் அலுவலர் தெரியாமல் கும்பாபிஷேகம் நடத்தியதாக கூறப்பட்ட தகவல் நீதிமன்றத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், முறையாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணையை மேற்கொண்ட கோவில் நிர்வாக அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை மூலம் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பராமரிப்பில் மூன்று தனி நபர்களின் குறுக்கீடு இருந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இரண்டு விற்பனை பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அதன் மூலம் கோவில் சொத்துக்களை தனி நபர்கள் அபகரித்துள்ளனர் தெரியவந்துள்ளது. இந்த நிலங்களை மீட்க அறநிலையத்துறையும் கோவில் நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்து நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

அதேபோல் இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை கோவில் நிர்வாக அதிகாரியின் அனுமதி இல்லாமல் திருப்பதி கவுண்டர் என்பவர் நடத்தியுள்ளார் என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, அது எப்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிக்கு தெரியாமல் கும்பாபிஷேகம் நடத்தி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பொறுப்பான அதிகாரிகளை நியமித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். தனி நபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கோவில் சொத்தை அபகரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Tags:    

Similar News