பத்து ஆண்டு சாதனைகளால் மக்களின் அபார நம்பிக்கையை பெற்ற மத்திய அரசு - பிரதமர் மோடி!
மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு பணிகளை பார்த்து தங்கள் அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் அனைத்தும் உரிய பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த யாத்திரையில் துப்புரவு வசதிகள், அத்யாவசிய நிதி சேவைகள், கேஸ் இணைப்பு வசதி, ஏழைகளுக்கான வீடுகள், உணவு பாதுகாப்பு போன்ற முதன்மை திட்டங்களின் பயன் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது தனது அரசின் பத்தாண்டு சாதனைகளை பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர் முந்தைய அரசுகளையும் சாடினார். தனது உரையில் அவர் கூறியதாவது:-
இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். எனவே இந்த பணிகளை பாரதம் நிறுத்தப் போவதுமில்லை சோர்வடைய போவதுமில்லை. விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாட்டின் பல்வேறு மொழிகளிலும் கூட உற்சாகம் இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மோடியையும் அவரது பணிகளையும் பார்த்து இருக்கிறார்கள். எனவே அவர்கள் அரசு மீதும் அதன் முயற்சிகள் மீதும் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த யாத்திரை தொடங்கிய வெறும் 15 நாட்களில் தாய்மார்கள், சகோதரிகள் என ஏராளமான மக்கள் நடந்து சென்று அதில் இணைகின்றனர். அதன் ரதங்களை மோடியின் உத்தரவாத வாகனமாக அடையாளம் காண்கின்றனர். இந்த ரதங்கள் இதுவரை 12000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை அடைந்திருக்கின்றன. 30 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மற்றவர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் முடிவடையும் இடத்தில் இருந்து மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது என்று குரல் நாடு முழுவதும் கேட்கிறது. முந்தைய அரசுகள் தங்களை நிலப் பிரபத்துவ மனநிலையில் வைத்திருந்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.