எட்டு கோடி விவசாயிகள் நலனுக்காக அசத்திய மத்திய அரசு - இன்ப அதிர்ச்சியில் விவசாயிகள்!

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு 15வது தவணைத்தொகையான ரூ.18000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

Update: 2023-11-15 08:30 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த நிதியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. அப்போது முதல் இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் கொரோனா காலத்தில், 41 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றனர். ஆனால் இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக உதவித்தொகை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே இப்படியான முறைகேடுகள் நடந்தது.இதனால விவசாயிகள் உதவி தொகை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கென தனி இணைய தளத்தை உருவாக்கிய மத்திய அரசு, முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவித்து வருகிறது. தமிழ்நாட்டில அதன்பிறகு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி தொகை வாங்கப்பட்டு. சுமார் 20 லட்சம் விவசாயிகள் வரை தமிழகத்தில் இன்னமும் விண்ணப்பிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா முழுவதும் சுமார் 18 கோடி விவசாயிகளுக்கு இந்த உதவி தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 14வது தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், 15வது தவணை இன்று விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 14-ஆவது தவணையான ரூ.17,000 கோடி கடந்த ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட்டு 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-ஆவது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். எனவே விவசாயிகள் கணக்கிற்கு 2000 ரூபாய் பணம் வந்துவிடும்.

Similar News