புதுப்பொலிவுடன் வண்ண ஓவியங்களால் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அயோத்தி நகரம் !
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ராமர் பாதை மற்றும் பிற முக்கிய தெருக்களில் உள்ள கடைகளின் கதவுகளில் இந்து மத சின்னங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் நாடு முழுவதும் உள்ள இந்து மத துறவிகள் முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் அழைக்கப்பட்டனர். கும்பாபிஷேக விழாவில் சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி அயோத்தி நகரம் இப்போதே கலைக்கட்ட தொடங்கியுள்ளது. நகரம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. உள்ளூர் அதிகாரிகளால் இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சகாதத்கஞ்ச் மற்றும் நயாகாட் ஆகியவற்றை இணைக்கும் 13 கிலோமீட்டர் சாலை புதுப்பிக்கப்பட்டு அதற்கு ராம் பாதை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த ராம் பாதையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன.
பிர்லா தர்மசாலை முதல் நயாகாட் வரையிலான பகுதி தற்போது காவி கொடிகள், ராமர் சிலைகள் , படங்கள் மற்றும் ராமர் கோவிலின் கலை படங்கள் விற்கும் விற்பனையாளர்களால் நிறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் கதவுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான காவிநிற வர்ணம் பூசப்பட்டுள்ளன. ராமர் பாதை மற்றும் கோவிலுக்கு செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் கதவுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பாரம்பரியத்தையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது .