குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது - அமித்ஷா!
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமித்ஷா உறுதியுடன் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் பா.ஜனதாவின் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது .இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார் . அப்போது அவர் பேசியதாவது :-
மேற்கு வங்காளத்தில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. வருகிற தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பா ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் அதற்காக நம் கட்சியினர் அதிகம் உழைக்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் சட்டம் அதை அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஊடுருவல் ,பசு கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் .மேலும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும் .
ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மம்தா பானர்ஜி மக்களையும் அகதிகளையும் தவறாக வழிநடத்து முயற்சிக்கிறார். அந்த சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். இவ்வாறு அமித் ஷா பேசினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ காட்சிகளை மேற்கு வங்காள பா.ஜனதா ஊடகப்பிரிவு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
SOURCE :DAILY THANTHI