NGO மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பண மோசடி செய்த மதபோதகர்!
NGO மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பண மோசடி செய்த மதபோதகர்!
NGO மூலம் வெளிநாட்டு நன்கொடை பெற்று சமூக சேவை செய்கிறேன் என்று பெயரில் மத மாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஒரு பக்கம் என்றால், பணம் சம்பாதிப்பதற்காக சேவை அமைப்புகள் தொடங்கும் மத போதகர்களின் பெயரும் அடிக்கடி செய்திகளில் அடிபடத் தான் செய்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் அப்படி ஒரு போதகரிடம் தன் பணத்தை இழந்துள்ளார். கூலித் தொழிலாளியாக பணிபுரியும் குமாருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள். ஏழ்மையான நிலையில் இருப்பதால் குமாருடைய குழந்தைகளின் கல்விக்கு பணத் தேவை ஏற்பட்டுள்ளது.
அருகே சலவன் பேட்டை என்ற பகுதியில் அந்தோணியார் சர்ச் தெருவைச் சேர்ந்த விக்டர் ஜேசுதாசன் என்பவர் நடத்தி வரும் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை தருவதாக குமாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து விக்டரைச் சந்தித்த குமார் அவரிடம் தனது குழந்தைகளுக்கு உதவித் தொகை பெற்றுத் தருமாறு கோரி இருக்கிறார்.
அதற்கு ஒப்புக் கொண்ட விக்டர் ₹20,000 ரூபாய் செலவாகும் என்று கூறியிருக்கிறார். குமாரும் உதவித்தொகை கிடைக்கும் என்று நம்பி பேசியபடி ₹20,000 ரூபாயை விக்டரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் விக்டர் உதவித்தொகை பெற்றுத் தராததால் தான் கொடுத்த பணத்தை குமார் திருப்பிக் கேட்டுள்ளார்.
அப்போது தான் இதே போன்று காங்கேயநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்டோரிடம் இவ்வாறு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் குமாருக்கு விக்டர் ஒரு காசோலையைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் செக் பவுன்ஸ் ஆன நிலையில் இது குறித்து விக்டரிடம் கேட்ட போது அவர் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து விக்டர் ஜேசுதாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் டி.ஐ.ஜியிடம் குமார் புகாரளித்துள்ளார்.