நாட்டின் மிகப்பெரிய கடல் பாலமான 'அடல் சேது' - பிரதமர் மோடி தலைமையில் நாளை திறப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலமான 'அடல் சேது' பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான 'அடல் சேது' பாலத்தை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார். அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக இப்பாலத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருப்பதாவது: மும்பையி்ன் செவ்ரி மற்றும் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நவசேவா பகுதி இடையே இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 21.8 கி.மீ தூரம். முந்தைய பயண நேரம் 2 மணி நேரமாகும். தற்போது 15-20 நிமிடங்களாக குறையும்.
மும்பையில் இருந்து அருகில் உள்ள நவிமும்பைக்குச் செல்ல ஏற்கெனவே இரு கடல் பாலங்கள் இருக்கின்றன. ஆனால், மும்பையின் தென் பகுதியில் இருந்து நவிமும்பைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. அதோடு மும்பை துறைமுகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைக் கருத்தில் கொண்டு மும்பை நகருக்குள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மும்பை சிவ்ரி என்ற இடத்தில் இருந்து நவிமும்பையில் இருக்கும் நவசேவா துறைமுக நகரத்துக்குச் செல்ல கடல் பாலம் அமைக்கும்பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.
இப்பாலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தென்மும்பையில் இருந்து நவிமும்பையில் உள்ள பன்வெல் நகரத்துக்குச் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சேமிக்க முடியும். இந்தக் கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டு இருப்பதால் அதில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் கார்கள் இந்தக் கடல் பாலத்தில் ஒரு முறை செல்ல ரூ.250 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. தின பாஸ் கட்டணம் ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.