ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க முடியாமல், நாற்பது நாட்கள் காசு சேர்த்து பிகில் திரைப்படம் டிக்கெட் வாங்கிய ரசிகர் - நெகிழவைத்த நிகழ்ச்சி! -கதிர் நையாண்டி

ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க முடியாமல், நாற்பது நாட்கள் காசு சேர்த்து பிகில் திரைப்படம் டிக்கெட் வாங்கிய ரசிகர் - நெகிழவைத்த நிகழ்ச்சி! -கதிர் நையாண்டி

Update: 2019-11-03 05:25 GMT

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வினோத். தீவிர விஜய் ரசிகர். கல்லூரியில் (அது எங்கே என்று கேட்டவர்) முதலமாண்டை மூன்றாண்டுகளாக படித்து வருகிறார். ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க முடியாத டிஜிட்டல் இந்தியாவில் வாழ்வதாக கூறும் இவர், எவ்வாறு பிகில் படம் பார்த்தார் என்ற மனதை கொள்ளை கொள்ளும் அந்த நிகழ்வை நம்மிடம் பகிர்ந்தார்.
"நிலவுக்கு ராக்கெட் விட்டு என்ன பயன்? ஒரு அஞ்சு ரூபா பிஸ்கெட் வாங்கக்கூட எங்களிடம் காசு இல்ல. ஆனா, தளபதி படம் பார்க்காம எங்களால இருக்க முடியாது. என்னதான் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், எங்க தளபதி படம் இருநூறு நாள் ஓடணும், அவருக்கு 3000 கோடி லாபம் வரணும். அப்போ தான் மோடிக்கு புரியும், எவ்ளோ நாள் தான் நீங்க பொருளாதாரம் நல்லா இருக்குனு எங்களை ஏமாத்துவீங்க, ஆனா பொருளாதார மந்தநிலையை மக்களுக்கு புரியவைக்க பிகில் படத்தோட வெற்றியே போதும்." என்று பொருளாதாரம் மற்றும் திரைப்படத்தின் வெற்றி இவ்விரண்டிற்குமான இணைப்பை அழகாக விவரித்தார் கல்லூரியில் பொருளாதார கல்வி பயிலும் அந்த மாணவர்.


அவர் தொடர்கையில், "பிகில் படம் ஓடணும்னா நாம தான் போய் பார்த்து ஓட வெக்கணும். ஆனா, நம்மகிட்ட தான் அஞ்சு ரூபா பிஸ்கெட் வாங்க காசு இல்லையே! அதுனால தினம் தினம் வாங்க முடியாத பிஸ்கெட் சாப்பிடாம, இப்படி நாற்பது நாள் சேர்த்து வெச்சு, கைவசம் இருநூறு ரூபா வந்துச்சு. அத அப்படியே எடுத்து போய் தளபதி படம் டிக்கெட் வாங்கிட்டேன். படமும் பார்த்துட்டேன். படம் செம சூப்பர். ஆனா, அத செரி இல்லேனு சொல்றாங்கோ. இது தான் டிஜிட்டல் இந்தியாவா?"


அவரின் கேள்வி நம் இதயத்தை துளைத்தாலும், அவரது இந்த சினிமா வெறி எங்களை நெகிழ வைத்தது. "பிகில் படம் ஓடணும்னா அஞ்சு ஆறு தடவை பார்க்கணும். அதான் இப்ப அம்மாவோட நகையை அடகு வைக்க போய்கிட்டு இருக்கேன்.


தங்க நகையைவிட எங்க தலைவனோடு புன்னகைக்கு தான் விலை அதிகம். நிலவுக்கு ராக்கெட் விடறாங்க, எங்க தலைவன் படத்துக்கு டிக்கெட் வாங்க நாங்க எவ்ளோ கஷ்டப்படறோம். என்னத்த வல்லரசு நாடோ?" என்று தலையில் அடித்தபடி அடகு கடை நோக்கி நடந்தார் அந்த புரட்சிகர இளைஞர்.இவரை போன்ற இளைஞர்கள் இருப்பதனால் தான், பொருளாதார மந்த நிலையிலும் திரைப்படங்கள் வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கின்றன.


குறிப்பு: இது முழுக்க கற்பனை செய்தியாகும். வாசகர்கள் இதனை நிஜ செய்தி என்று நினைத்து குழம்பக்கூடாது. எனினும் தமிழ் செய்தி ஊடங்கங்கள் போல் அல்லாமல், நாங்கள் இதனை குறிப்பினில் சொல்கிறோம்.


Similar News