'பாஜகவின் உத்வேகத்தால் கலக்கமடைந்து நிற்கும் எதிர்க்கட்சிகள்'- பிரதமர் மோடி!
பாஜகவினரின் உத்வேகத்தை கண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி உத்தர பிரதேசத்தின் 10 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய 22,648 வாக்குச்சாவடிகளில் நமோ செயலி வாயிலாக பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி பேரவை தேர்தலாக இருந்தாலும் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பால் பாஜக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தொண்டர்களின் உத்வேகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நமது முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனையைப் படைக்கும் உறுதியுடன் பாஜகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பாஜகவின் வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .
பாஜகவினர் தங்களின் முயற்சிகளை சரியான திசையில் வேகப்படுத்தி ஒவ்வொரு வாக்காளரையும் அணுக வேண்டும் .வாக்காளர்களுடன் தொண்டர்கள் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.மக்களைப் பொறுத்தவரை நீங்களே கட்சியின் முகம். உங்களின் வாயிலாகவே மக்கள் என்னை பார்க்கின்றனர் .உங்களின் வார்த்தையை எனது வார்த்தையாக உணர்கின்றனர். நீங்களே பெரிய மனிதர். மிகப் பொறுப்பான மனிதர். தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நம்பிக்கை ஒளியாக வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்களை மக்கள் பார்க்கின்றனர்.தொண்டர்களின் நடத்தை ,ஊக்கம், நம்பிக்கை இவை அனைத்தையும் மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். எனவே அகங்காரம் சிறிதும் இன்றி தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
SOURCE :Dinaseithi