வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்- நிர்மலா சீதாராமன் உறுதி!

தூத்துக்குடி வெள்ளத்தை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன், வீடு இழந்த மக்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Update: 2023-12-27 10:30 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர், எல் முருகன் ,தமிழக நிதி அமைச்சர் மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


குறிஞ்சி நகரில் மழை வெள்ளநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த அவர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். முறப்பாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர்களிடம் கேட்டறிந்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த பெண்கள் வெள்ள பாதிப்பு தொடர்பாக அளித்த கோரிக்கை மனுக்களை நிர்மலா சீதாராமன் பெற்றுக் கொண்டார்.


வீடு  இழந்தவர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் உறுதி அளித்தார். ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனையிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.


SOURCE :Polimernews.com

Similar News