ஒடிசா விபத்து நடந்த பகுதி வழியாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
ஒடிசாவின் பாலசூரில் ரயில் விபத்து நடந்த பகுதி வழியாக நேற்று காலை முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் - பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த இரண்டாம் தேதி விபத்துக்குள்ளாகின .உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 275 பேர் பலியானார் . 1100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் . விபத்தைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உயிரிழந்தவர்களின் உடல் மீட்கப்பட்டதுடன் காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சிக்னலிங் துறையில் உள்ள எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விபத்தின் பின்னணியில் நாச வேலை உண்டா என்பதைக் கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரைத்து இருப்பதாக அவர் கூறினார். இந்த நிலையில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய இடத்தில் தண்டவாளங்கள் பெயர்ந்து பெரும் சேதமடைந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன . மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன .
அதே நேரம் சம்பவ இடத்தின் சீரமைப்பு பணிகளும் முடித்து விடப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களுக்கு பதிலாக புதிய தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு அரசு வேகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன . இந்த பணிகள் அனைத்தும் நேற்று முன் தினம் இரவுடன் நிறைவடைந்தன . பின்னர் அந்த வழியாக ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. அதன்படி விசாகப்பட்டணத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவிலேயே அந்த வழியாக கடந்து சென்றது.