மலைப்பாதை சரியாகும் வரை திருப்பதி தரிசனத்திற்கு பக்தர்கள் வரவேண்டாம் - தேவஸ்தானம் அறிவிப்பு !
தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் காலை திருப்பதி மலைப்பாதையில் 14-வது கிலோ மீட்டர் மற்றும் 16-வது கிலோமீட்டரில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன. மேலும் 16- வது கிலோ மீட்டரில் பெரிய அளவிலான பாறை உருண்டு விழுந்து சாலை முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் நேற்று மலைப் பாதை மூடப்பட்டு அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். பின்னர் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. வாகனங்கள் எதிரெதிர் திசையில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதனால் வாகனங்கள் திருமலைக்கு செல்ல பல மணி நேரம் ஆனது. இந்த நிலையில் மலைப் பாதை சீரமைக்கும் பணி 10 முதல் 15 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. தற்போது தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், நிலைமை சீரான பிறகு எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு வரலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.