உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 10வது நாளாக குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் ரஷ்ய படைகளின் தாக்குதலை உக்ரைன் படைகளால் எதிர்கொள்ள முடியாத நிலையே உருவாகியுள்ளது. இரண்டு தரப்பிலும் பல ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்களும் ஏராளமானோர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனிடையே தங்களது வான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார். இது போன்று செய்வதால் உக்ரைன் வான்வெளியில் எவ்வித விமானங்களும் பறக்க முடியாது. இது போன்று செய்வதால் ரஷ்ய போர் விமானங்களும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியும். அதே சமயம் தடையை மீறும் அனைத்து விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்த முடியும். இக்கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்தது.
இந்நிலையில், தங்கள் நாட்டின் கோரிக்கையை நிராகரித்த நேட்டோவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பதிவில், நேட்டோ அமைப்பு பலம் குறைந்துள்ளது. எனவே உங்கள் நடவடிக்கையால் எங்கள் மக்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள். நீங்கள் ரஷ்யாவுக்கு பச்சை கொடியை காட்டிவிட்டீர்கள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அழியும். இவ்வாறு அவரது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: NATO