உக்ரைனில் வசித்து வரும் பிரிவினைவாதப்பகுதி மக்களை பாதுகாக்கின்ற வகையில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக போரை அறிவித்தார். அதன்படி மாஸ்கோ நேரம், நேற்று (பிப்ரவரி 24) அதிகாலை 5.55 மணி ஆகும்.
மேலும், நாங்கள் நடத்துகின்ற போரில் எந்த நாடாவது தலையிடும் பட்சத்தில் அவர்கள் வரலாற்றில் சந்திந்ததை விட மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிரடியான எச்சரிக்கையை விடுத்தார். இவரது எச்சரிக்கையால் பல்வேறு நாடுகள் இன்றும் அமைதி காத்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளின் தலைவர்கள் இதுவரை வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் கீவ், கார்கிவ், டினிப்ரோ உள்ளிட்ட நகரங்களில் இருந்த ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டது. அங்கு இருந்த ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், கீவ் பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் அதிரடியாக புகுந்தனர். இதில் 18 பேர் வரைக்கும் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டது. இதன் பின்னர் கீவ் நகரை தொடர்ந்து புரோவாரி நகரிலும் ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணை மூலமாக தாக்குதலை நடத்தினர். அங்கு 6 பேர் வரைக்கும் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 74 ராணுவ கட்டமைப்புகள் செயல் இழந்துள்ளது. இதில் விமானநிலையங்கள் மற்றும் 3 கட்டளை சாவடிகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 18 ரேடார் அமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுப்பிரிவு தலைமையகமும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து காணொலி மூலமாக அவர் உரையாற்றினார். ரஷ்ய படைகளின் தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 137 மாவீரர்களை இழந்துள்ளோம் என்று உருக்கமான உரையில் குறிப்பிட்டார். ரஷ்ய தரப்பிற்கும் சேதங்கள் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Business Insider