தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 'என் மண் என் மக்கள் யாத்திரை'- மத்திய மந்திரி எல்.முருகன்!
'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை 'என்மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்டவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திறந்தவெளி காரில் விழா மேடைக்கு வந்த அவருக்கு கூடியிருந்த பா.ஜனதா தொண்டர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
பொதுக்கூட்டம் மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நீலகிரி மாவட்டம் மலைவாழ் மக்களின் பாரம்பரிய அடையாளமான கையினால் நெசவு செய்யப்பட்ட துண்டை மத்திய இணை மந்திரி எல். முருகன் அணிவித்தார். ஜல்லிக்கட்டு தடையை நீக்கி தமிழர்களின் உரிமையை காத்ததற்காக ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வழங்கினார். கொங்கு பகுதியில் விளையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்று தந்ததற்காக 65 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட மஞ்சள் மாலையை அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக்கூட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை மந்திரி எல் முருகன் பேசியதாவது :-
'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழையும் தமிழ் மக்களையும் தமிழகத்தையும் காக்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார் .கடந்த மாதம் இதே நாளில் மூன்று நாட்கள் கடுமையான விரதம் இருந்து ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி சென்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டு 'எண் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பிரதமர் மோடி தமிழ் மொழியை ,தமிழ்நாட்டை, தமிழ் மக்களை, தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று வருகிறார். ஐநா சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்கினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோலை நிறுவி பெருமை சேர்த்தார் .'வேண்டும் மோடி மீண்டும் மோடி' இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI