வாகனப் பேரணியில் பங்கேற்கும் மத்திய மந்திரிகள் அமித்ஷா ,நிர்மலா சீதாராமன் -தமிழ்நாட்டுக்கு வருகை!
தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று வருகிறார்கள். இருவரும் வாகன பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பா ஜனதா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .மீண்டும் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதற்கு இடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வருகிறார்கள். மதுரை காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன. மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர் .அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. இதனால் பாதுகாப்புக்கு காரணங்களை காட்டி மத்திய மந்திரி அமித் ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளி வைக்கப்பட்டது .
ஆனால் இன்று மாலை 6. 15 மணியளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அந்த பேரணி ஜான்சி ராணி பூங்கா , நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீனமடம் அருகே நிறைவடைகிறது. பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமைதியாக ஈடுபடுகிறார் .பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறார் என்று பா ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.