இந்தியாவுக்கே முன்மாதிரியான தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி திட்டம் - இதுவரையில் எந்த மாநிலமும் மேற்கொள்ளாத ஒரு முயற்சி.?

இந்தியாவுக்கே முன்மாதிரியான தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி திட்டம் - இதுவரையில் எந்த மாநிலமும் மேற்கொள்ளாத ஒரு முயற்சி.?

Update: 2019-11-05 12:52 GMT

தமிழக அரசு, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதாகவும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 எனும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.


தமிழக முதல்வர் 2018-2019-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்’ என சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்


இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப் பேரவையில் ஒப்புதல் பெற்ற இச்சட்ட வரைவு அக்டோபா் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலைப் பெற்று சட்டம் ஆகியுள்ளது.


இந்த சட்டத்தை இந்தியாவிலேயே தமிழக அரசு தான் முதன் முதலில் இயற்றியுள்ளது. இச்சட்டப்படி, அதிக விளைச்சல் காரணமாக விவசாயப் பொருள்களின் விலை குறைந்து விவசாயிகள் இழப்புக்கு ஆளாகும்போது ஒப்பந்த நிறுவனங்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுத்துவிடும்.


தமிழ் நாட்டை பொறுத்தவரை மூலிகைப் பயிர்கள், இறைச்சிக் கோழி போன்றவை ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை இந்த சட்டம் உறுதி செய்யும்.


இந்தச் சட்டத்தின்படி, விவசாய விளை பொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய் யப்பட்ட பொருட்களை, ஒப்பந்தம் அடிப்படையில் கொள்முதல் செய்பவர் அல்லது வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அல்லது அதனை பதப்படுத்தும் நிறுவனங்கள், ஒப்பந்தம் செய்த அன்றே விலையினை நிர்ணயம் செய்து கொள்ளும். இதன் மூலம் அறுவடைக்கு பின் ஏற்படும் விலை சரிவை தவிர்க்க இயலும்.
ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. சில நேரங்களில் அதிக விளைச்சல் காரணமாக, உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சி ஏற்படும். இது போன்ற சமயங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்தவித பண இழப்பும் ஏற்படாமல், முன்னரே ஒப்பந்தம் அடிப்படையில் விலை உறுதி செய்யப் படுகிறது.


ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தில், கொள் முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும் பட்சத்தில் தோன்றும் இடர்பாடுகளைக் களைந்து, விளைபொருட்களுக்குரிய தொகையை பெற்றுத்தரும் வகையில் இச் சட்டம் செயல் படும். இதன் மூலம் சட்ட வடிவமாக்கப்பட்ட ஒப்பந்த சாகுபடி திட்டம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.


Similar News